Friday, April 3, 2009

பூ இலை முள் பனிமுட்களுக்கிடையில்
பூத்த மலருக்கு
இதழ் மென்மையினை
மறைக்க முடிந்ததா..?

முட்களுக்கிடையில்
பூ மலர்ந்தும்
முள் குத்தி மலருக்கு
ரத்தம் வலிந்ததா..?

பனித்துளிகளை
இலைகள் தாங்கி
நின்றபோதும்
இலையோடு பனித்துளிக்கு
ஒட்டமுடிந்ததா..?

இலையரும்பில்
மொட்டுதித்து
மலர்களை பிரசவித்த
போதும் இலைகளால்
மலர் போல் மணக்க
முடிந்ததா..?

எனது அன்பு
உரமாகியும்
உனது கண்ணீர்
நீராகியும்
மலர்களால்
உதிராமல்
நிலைக்க
முடிந்ததா..?Wednesday, March 18, 2009

வெறுமைக்கு விடை தேடி.!

திரும்பிப் பார்க்கிறேன்
வெறுமை தெரிகிறது!
நிழல் கூட முகம்
திருப்பிக் கொள்கிறது!

வெட்கப்பட்டா.?
துக்கப்பட்டா.?
பதிலின்றியா.?

மணலில் சிதறிக்கிடந்த
நீர்த்துளிகள்.!

வெறுமைக்கு விடை தேடி
வெப்பமேறிக்கிடந்த
மணலில் குப்புறச் சயனித்தேன்!
மணலை முத்தமிட்டது உதடுகள்!

உதட்டோரத்தில் பதிலுக்கு
முத்தமிட்ட நீர்த்துளியொன்று!

உப்புச்சுவை கைத்துப்போனது!
இல்லை
இவை நீர்த்துளிகள் இல்லை!

உழைத்து உழைத்து
முறுக்கேறி பின்
உதிர்ந்துப்போன உதிரமாம்
வியர்தைத்துளிகள்!
மிஞ்சினால் எவனோ
தொலைத்து விட்டுப்போன
கண்ணீர்த்துளிகள்!

மரத்துப் போன
முட்டாள் மனிதா..!

வியர்வைத்துளியோ.!
கண்ணீர்த்துளியோ.!
தொலைத்துப் போனதேனடா.!
உனக்குன் பாட்டன் சேர்த்த
உத்தமச் சொத்து
இதொன்று தானடா.!

நீ தொலைத்த
வியர்வைத்துளிகள்
விற்கப்பட்டு கொள்ளை
லாபமாம்
விற்றுத்தின்ற
கொள்ளை கூட்டம்

ஏப்பம் விட்டுச் சொல்கிறது!

உன் கண்ணீர்த் துளிகள்
மிச்சமிருப்பதாய்
விளம்பரம் பார்த்தேன்!
காப்பாற்றிக்கொள்!

இன்று நீ அலையவிடப்பட்ட
ஆயுள் கைதி!

என் வெறுமைக்கு
விடை..?

Wednesday, March 4, 2009

காதல் ரப்பர் முத்திரை

தொண்டைக்கும் நெஞ்சுக்கும்
இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்
சிக்கிக்கிடக்கிறது காதல்

அன்பின் மறுபெயர் காதல்
பாசத்தின் இருப்பிடம் காதல்
ஆன்மீக பற்றின் இடைச்சுவர் காதல்
முக்தியின் அடித்தளம் காதல்
ஏற்றுக்கொள்கிறேன்

மோகத்துக்கும் காமத்துக்கும்
இடைப்படட இடைத்தரகர் காதல்
என்றால் முடியவில்லை ஏற்றுக்கொள்ள

காதல் ஒன்றும் சப்பித்துப்பிவிட்டு
போகும் கரும்புச்சக்கையல்ல
இனிக்கும் போது மட்டும்
இனிப்பை தேடியழையும்
எறும்புகளைப் போல

நீங்கள் செய்யும் அந்த
அறுவருப்பான உறவுக்கு
காதலென்ற முகமூடி
அணிவித்து காதலை தூக்கிலிட
நேரம் குறிக்காதீர்கள்

காதல் நிகழ்கால
ஒப்பந்தக் கூண்டில்
ஒப்புதலின்றி நிற்கிறது
சந்தர்ப்ப சூழ்நிலையின்
சூன்ய பிரதேசமானதா காதல்

உங்கள் காதல்
உங்கள் காற்சட்டையில்
உறங்கி கிடக்கும் பணப்பையின்
பாரத்தில் நடனமாடுகிறது.

உல்லாச விடுதியின்
படுக்கையறைக்கும்
ஆளில்லா சினிமாக் கொட்டகையின்
இருக்கைக்கு அடியிலும்
கழுத்திருகிப் போய் அவலக்குரல்
விடுகிறது உங்கள்
காதல்

இன்றைய சாஜகான்கள்
காதலுக்காய் காதலிக்காய்
சமாதிக்கட்டியிருக்கிறார்கள்
கைத்தெலைபேசியில்

உங்கள் உணர்ச்சியெனும்
வாளினால் காதலின்
கழுத்தை வெட்டி
ரத்தம் குடித்து காதலை
உயிரருத்து ஊசலாடவைப்பதுதானா
உங்கள் நோக்கம்...!

Tuesday, February 24, 2009

என் அடிமனதில்........

நீ கண்ட இன்பத்தில்
என் உடல் உயிர்த்தது

நீ பட்ட துன்பத்தில்
என் இதயம் துடித்தது

நீ விட்ட கண்ணீரில்
என்னில் ஈரம் துளிர்த்தது

நீ என்னை ஈன்ற நொடியில்
உன் கதறும் குரல் கேட்ட எனக்கு
வாழ்வின் வலி புரிந்தது

நீ என்னை ஈன்றபின்
பெருமூச்சு விட்டு
கண்ட அமைதியில் எனக்கும்
வாழ்வின் அமைதி தெரிந்தது

நீ என்னை அன்போடு
அள்ளி அணைத்தபோது
எனக்கும் வாழப்பிடித்தது

Friday, February 20, 2009

பெண்ணே....!

பெண்ணே......
உன் வேகம் சொல்
விவேகம் கொடு...!

உனது விழிகளின்
கூர்மையின்
ஆழம் காண்பி....!

கற்றுக் கொள்
காவியம் எழுது
கல்வியை உன் விரல்

நுனியில் தொடுத்து வை...!

ஆனவம் விடுத்து
அன்பு கொள்
கடவுளை உன்னிடத்தில்
காட்டு.....!

உனது தோல்வியில்
இன்பப்படு
வெற்றி கொள்....!

உனது கற்பின்
தூய்மைக்குப் பூஜை செய்
இரகசியம் கொள்...!


சமைத்துப்பார்
சுவைத்துப்பார்

பிழைதிருத்து....!

உனது பிழைவிட்டு

பிறர் வீட்டு சுவையில்
பிழையறிவதை விட்டு விடு....!

உனது அழகுக்கு அர்த்தம்
கற்பித்து கோபப்படு...!

உனது தாய்மைக்கு
வணக்கம் கேட்டு

உண்ணா விரதம்
செய்....!

பூஜ்ஜியத்தில்

ஒரு ராஜ்ஜியம் செய் - உனது
பேய்களையும் பிசாசுகளையும்
அதில் சிறையிடு....!

உனது தடைகளை
உடைத்தெறி
உனது வெட்கத்தை
பாடப்புத்தகமாக்கு

திறந்து பார்
மூடிவை...!

வல்லினம்
மெல்லினம்
இடையினம் சேர்த்து
அகிம்சை போர் செய்....!

பயனில்லையேல்
ஆயுதமேந்து - உனது
கத்திக்கும் ரத்தம் காட்டு
உனது நாட்டின்
கொடியை நீயே ஏற்று....!
பெண்ணே உன்னை
உனக்குள் தேடிப்பார்....!

Thursday, February 12, 2009

உடைந்த வானவில்......!

ஒரு ராத்திரியன் புலம்பல்
எனது காதல்.....!
அவசர அவசரமாய்
மீட்டிப்பார்க்க துடித்தது மனம்
இது ஒரு கணப் பொழுதில்
இமைக்கும் கண்ணிமையல்ல
கருவிழி

உடைந்த வானவில்
பசையிட்டு ஒட்டவைத்துள்ளேன்
நான் வாசித்த வயலினில்
அவள் ஸ்ருதி
சேரவேயில்லை இறுதிவரை

அவளின் நினைவுகளை
ஒரு கிண்ணத்திலிட்டு அடிமனதில்
ஒரு ஓரமாய் ஒழித்து வைத்துள்ளேன்
மீட்டிப் பார்க்கும் நினைவுப் பூஜையில்
தீர்த்தமாய்த் தொட்டுப் பருக

என் உயர்தரப் பாடக்கொப்பியில்
பாடதிட்டம் எழுதும் முன்
என்னால் எழுதப்பட்டது அவள்
பெயர்.....? - ஏன்
என் பேனைமுனையின்
தடுமாற்றங்களில் கூட
எனது பெயரின் முதலெழுத்தும்
அவளது பெயரின் முதலெழுத்தும்

அவளிடம் சொல்ல நினைத்த
காதலை பலமுறை என் அறைக்
கண்ணாடியிடம் சொல்லியிருக்கிறேன்
இறுதியில்
என் அறைக்கண்ணாடி தான்
என்னைக் காதலித்தது

எப்படியோ காற்றின் வழியில்
அவள் காதுகள்
என் காதலை அறிந்தும்
அறியாததுமாய்.......!
அவளின் உதிர்ந்த கூந்தல் கூட
காற்றிலடிப் பட்டேனும்
என் பக்கம் வந்ததில்லை

ஒரே ஒரு முறை தொலைவினில்
தொலைபேசியில்
ஒரு முனையில் நான்
மறு முனையில் அவள்
என்னைப் பொறுத்தவரையில்
அது ஒரு விபத்து

பல முறைக் கண்ணாடியிடம்
சொல்லியதை
முதல் முறையாய் அவளிடம்
சொன்னேன்

அவள் சொன்ன பதில்
புகைவண்டி புறப்பட்டு வெகு
நேரமானதாய்

உரையாடல் நேரம் முடிந்தது
தொலை பேசிக்கு
வியர்த்திருந்தது.....!
கண்ணீர் வடித்திருந்தது.....!

உடைந்த வானவில் பசையிட்டு
ஒட்டி வைத்துள்ளேன்
நினைவுகளாய்..........!

Tuesday, February 10, 2009

தொலைதூர இருளில்................!

இரவுப் பனியின்
இனிமையான குளிர்

பெளர்ணமி நிலவின் ஒளி
உதய தரிசன சூரியனின் இளஞ் சூடு

மல்லிகைப் பூக்களின் தூய்மை - அதன்
திகட்டாத மணம்

என் அம்மா என்னிடம் காட்டிய
விலை மதிப்பிட முடியா அன்பிலும் உச்ச அன்பு

தந்தையின் அன்பான
அரச கட்டளை

சிறு வயதில் சகோதரன் தொட்டதெற்கெல்லாம்
என்னோடு போட்ட போட்டி

இறைவனிடம் இருப்பதாய் கேட்ட
மன்னிக்கும் மனப்பாங்கு

புல்லாங்குழக்குச் சொந்தமான
இன்னிசைக் குரல்

மலர்களின் காதலி
சிவப்பு ரோஜாவின் செவ்விதழ்

பெண்வுருவச்சிலை மட்டும் செதுக்குமொரு
சிற்பியின் திருவிளையாடல்

மூங்கிலின் இலைகளை தாங்கி நிற்கும் - அதன்
அதிகப்பிரசங்கி தனமான கால்கள்

ஒன்றேனும் உதிர்ந்தாலும் மானம் போனதாய்
எண்ணிய மான்புமிகு கவரிமானின் கூந்தல்

இறைவன் உயிர்க்கொடுத்த மீன்களில் தவறுதலாயிரு
மீன்களுரு மாரியது போன்ற கண்கள்

இத்தனையும் மொத்தமாய்ச் சேர்ந்தவொரு பெண்ணவளை
தொலைதூர இருளில் பார்த்தேன்.......................!!!

அந்த உத்தமியென் வாழ்நாள்
காதலியானால்....................!!!

Wednesday, January 14, 2009

தமிழ் வளர்க்க தேவையில்லை.............!

வேண்டிக்கொள்கிறேன்......!
யாரும் தமிழ் வளர்க்க
தேவையில்லை - தமிழ்
நன்றாகவே வளர்ந்திருக்கிறது......!

தமிழ் வளர்ப்பதாய்ச் சொல்லி
உங்கள் தீட்டாத கத்தியினால்
வெட்டி தமிழை மொட்டையாக்கி
விடாதீர்கள்.......!

தமிழை அதன் தன்மானத்தோடு
வாழவிடுங்கள்.......!
உங்கள் பட்டப்படிப்பு தேவையில்லை
தமிழை வாழவைக்க.......!

தமிழ் உங்கள் ரத்தத்தில்
ஊறியிருக்க வேண்டும் ........!
அதற்கு உங்கள் அன்னை பாலுட்டும் போதே
தமிழையும் சேர்த்திருக்க வேண்டும்.........!