Tuesday, February 24, 2009

என் அடிமனதில்........

நீ கண்ட இன்பத்தில்
என் உடல் உயிர்த்தது

நீ பட்ட துன்பத்தில்
என் இதயம் துடித்தது

நீ விட்ட கண்ணீரில்
என்னில் ஈரம் துளிர்த்தது

நீ என்னை ஈன்ற நொடியில்
உன் கதறும் குரல் கேட்ட எனக்கு
வாழ்வின் வலி புரிந்தது

நீ என்னை ஈன்றபின்
பெருமூச்சு விட்டு
கண்ட அமைதியில் எனக்கும்
வாழ்வின் அமைதி தெரிந்தது

நீ என்னை அன்போடு
அள்ளி அணைத்தபோது
எனக்கும் வாழப்பிடித்தது

Friday, February 20, 2009

பெண்ணே....!

பெண்ணே......
உன் வேகம் சொல்
விவேகம் கொடு...!

உனது விழிகளின்
கூர்மையின்
ஆழம் காண்பி....!

கற்றுக் கொள்
காவியம் எழுது
கல்வியை உன் விரல்

நுனியில் தொடுத்து வை...!

ஆனவம் விடுத்து
அன்பு கொள்
கடவுளை உன்னிடத்தில்
காட்டு.....!

உனது தோல்வியில்
இன்பப்படு
வெற்றி கொள்....!

உனது கற்பின்
தூய்மைக்குப் பூஜை செய்
இரகசியம் கொள்...!


சமைத்துப்பார்
சுவைத்துப்பார்

பிழைதிருத்து....!

உனது பிழைவிட்டு

பிறர் வீட்டு சுவையில்
பிழையறிவதை விட்டு விடு....!

உனது அழகுக்கு அர்த்தம்
கற்பித்து கோபப்படு...!

உனது தாய்மைக்கு
வணக்கம் கேட்டு

உண்ணா விரதம்
செய்....!

பூஜ்ஜியத்தில்

ஒரு ராஜ்ஜியம் செய் - உனது
பேய்களையும் பிசாசுகளையும்
அதில் சிறையிடு....!

உனது தடைகளை
உடைத்தெறி
உனது வெட்கத்தை
பாடப்புத்தகமாக்கு

திறந்து பார்
மூடிவை...!

வல்லினம்
மெல்லினம்
இடையினம் சேர்த்து
அகிம்சை போர் செய்....!

பயனில்லையேல்
ஆயுதமேந்து - உனது
கத்திக்கும் ரத்தம் காட்டு
உனது நாட்டின்
கொடியை நீயே ஏற்று....!
பெண்ணே உன்னை
உனக்குள் தேடிப்பார்....!

Thursday, February 12, 2009

உடைந்த வானவில்......!

ஒரு ராத்திரியன் புலம்பல்
எனது காதல்.....!
அவசர அவசரமாய்
மீட்டிப்பார்க்க துடித்தது மனம்
இது ஒரு கணப் பொழுதில்
இமைக்கும் கண்ணிமையல்ல
கருவிழி

உடைந்த வானவில்
பசையிட்டு ஒட்டவைத்துள்ளேன்
நான் வாசித்த வயலினில்
அவள் ஸ்ருதி
சேரவேயில்லை இறுதிவரை

அவளின் நினைவுகளை
ஒரு கிண்ணத்திலிட்டு அடிமனதில்
ஒரு ஓரமாய் ஒழித்து வைத்துள்ளேன்
மீட்டிப் பார்க்கும் நினைவுப் பூஜையில்
தீர்த்தமாய்த் தொட்டுப் பருக

என் உயர்தரப் பாடக்கொப்பியில்
பாடதிட்டம் எழுதும் முன்
என்னால் எழுதப்பட்டது அவள்
பெயர்.....? - ஏன்
என் பேனைமுனையின்
தடுமாற்றங்களில் கூட
எனது பெயரின் முதலெழுத்தும்
அவளது பெயரின் முதலெழுத்தும்

அவளிடம் சொல்ல நினைத்த
காதலை பலமுறை என் அறைக்
கண்ணாடியிடம் சொல்லியிருக்கிறேன்
இறுதியில்
என் அறைக்கண்ணாடி தான்
என்னைக் காதலித்தது

எப்படியோ காற்றின் வழியில்
அவள் காதுகள்
என் காதலை அறிந்தும்
அறியாததுமாய்.......!
அவளின் உதிர்ந்த கூந்தல் கூட
காற்றிலடிப் பட்டேனும்
என் பக்கம் வந்ததில்லை

ஒரே ஒரு முறை தொலைவினில்
தொலைபேசியில்
ஒரு முனையில் நான்
மறு முனையில் அவள்
என்னைப் பொறுத்தவரையில்
அது ஒரு விபத்து

பல முறைக் கண்ணாடியிடம்
சொல்லியதை
முதல் முறையாய் அவளிடம்
சொன்னேன்

அவள் சொன்ன பதில்
புகைவண்டி புறப்பட்டு வெகு
நேரமானதாய்

உரையாடல் நேரம் முடிந்தது
தொலை பேசிக்கு
வியர்த்திருந்தது.....!
கண்ணீர் வடித்திருந்தது.....!

உடைந்த வானவில் பசையிட்டு
ஒட்டி வைத்துள்ளேன்
நினைவுகளாய்..........!

Tuesday, February 10, 2009

தொலைதூர இருளில்................!

இரவுப் பனியின்
இனிமையான குளிர்

பெளர்ணமி நிலவின் ஒளி
உதய தரிசன சூரியனின் இளஞ் சூடு

மல்லிகைப் பூக்களின் தூய்மை - அதன்
திகட்டாத மணம்

என் அம்மா என்னிடம் காட்டிய
விலை மதிப்பிட முடியா அன்பிலும் உச்ச அன்பு

தந்தையின் அன்பான
அரச கட்டளை

சிறு வயதில் சகோதரன் தொட்டதெற்கெல்லாம்
என்னோடு போட்ட போட்டி

இறைவனிடம் இருப்பதாய் கேட்ட
மன்னிக்கும் மனப்பாங்கு

புல்லாங்குழக்குச் சொந்தமான
இன்னிசைக் குரல்

மலர்களின் காதலி
சிவப்பு ரோஜாவின் செவ்விதழ்

பெண்வுருவச்சிலை மட்டும் செதுக்குமொரு
சிற்பியின் திருவிளையாடல்

மூங்கிலின் இலைகளை தாங்கி நிற்கும் - அதன்
அதிகப்பிரசங்கி தனமான கால்கள்

ஒன்றேனும் உதிர்ந்தாலும் மானம் போனதாய்
எண்ணிய மான்புமிகு கவரிமானின் கூந்தல்

இறைவன் உயிர்க்கொடுத்த மீன்களில் தவறுதலாயிரு
மீன்களுரு மாரியது போன்ற கண்கள்

இத்தனையும் மொத்தமாய்ச் சேர்ந்தவொரு பெண்ணவளை
தொலைதூர இருளில் பார்த்தேன்.......................!!!

அந்த உத்தமியென் வாழ்நாள்
காதலியானால்....................!!!